கோவில்பட்டியில் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம்; அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்

கோவில்பட்டியில் வேளாண்மை நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் தொடக்க விழா மற்றும் விவசாயிகளுக்கு மானிய இடுபொருட்கள் வழங்கும் விழா கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குநர் மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி நடமாடும் மண் பரிசோதனை நிலைய பேருந்தை தொடங்கி வைத்தார்.
மேலும், 1650 பயனாளிகளுக்கு கோடை உழவு மானியம், 250 பயனாளிகளுக்கு பயிர் வகைகள் விதை தொகுப்பு, 1043 பேருக்கு மண் வள அட்டை, 2 பேருக்கு பேட்டரி தெளிப்பான் ஆகியற்றை வழங்கி பேசியதாவது:-
“தமிழக முதலமைச்சர் 2021-ம் ஆண்டில் இருந்து வேளாண்மைத்துறைக்கு தனி பட்ஜெட் கொண்டு வந்தார். அதன் மூலம் வேளாண்மைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட விவசாய கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
வேளாண்மை துறையில் விண்ணப்பம் கொடுத்தாலே எளிதாக அந்த டிராக்டரை பெறக்கூடிய ஒரு வசதி செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலத்துக்கு ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிப்பது குறித்து இளைஞர்களுக்கு தேவையான பயிற்சியும் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு பலன் தரக்கூடிய மண்வள அட்டை திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டது. தற்போது முதலமைச்சர் இந்த திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்,” இவ்வாறு கீதா ஜீவன் பேசினார்,
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, தாசில்தார் பாலசுப்பிரமணியன் , வேளாண்மைத்துறை அதிகாரிகள், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன் , பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகரச் செயலாளர் (கிழக்கு) சுரேஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தனம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் மகேந்திரன்,பழனிக்குமார், கற்பகம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்
பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-‘
, “நிலத்தின் தன்மை அமிலத்தன்மையா, சுண்ணாம்புத் தன்மையா, உப்புத்தன்மையா என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்றவாறு நிலத்தில் எந்த உரமிட வேண்டும். என்ன பொருட்களை விளைவிக்க வேண்டும் என்றெல்லாம் உழவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மண்வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நடமாடும் மண் பரிசோதனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு வங்கியில் உறுப்பினரான உடனே கடன் பெறும் வசதிகள், பயிர்க்கடன் தள்ளுபடி செய்கிற வசதி, மத்திய அரசு விவசாயிகள் கடன் கொடுப்பதற்கு சிபில் ஸ்கோர் பார்க்கிறது. ஆனால், கூட்டுறவு வங்கியில் கடன்களை வாங்கும் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் பார்க்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதே போல், அனைத்து திட்டங்களும் விவசாயிகளுக்கு சென்றடையும் வண்ணம் முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.
கடலைமிட்டாய்க்கான குறுங்குழுமம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் இடம் வாங்கிக் கொடுத்துள்ளனர். அங்கு சுமார் ரூ.2.50 கோடியில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. அங்கு சிறிய அளவில் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் குறுங்குழுமத்தில் வந்து, உற்பத்தி செய்யும்போது மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாறும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் அனைத்துத்துறை அதிகாரிகள் அங்கு வருவதால் எளிதாக மக்களுக்கு சேவைகள் கிடைக்கும். முதல்வர் கொடுத்து வாக்குறுதிகள் மட்டுமல்ல கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்”
இவ்வாறு கீதா ஜீவன் கூறினார்,







