சிறுகுறுவிவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்பாசனம் ; ஆட்சியர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-‘
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுகுறுவிவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்பாசனம் அமைத்திட இலக்கீடுகள் பெறப்பட்டு வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் உளுந்து, பாசி, பருத்தி, எள், நிலக்கடலை, கம்பு, மக்காச்சோளம், சோளம், சிறுதானியங்கள் மற்றும் வேளாண்காடு வளர்ப்பில் வளர்க்கப்படும் மகாகனி,செம்மரம், தேக்கு,சவுக்கு போன்ற மர பயிர்களுக்கு நுண்ணீர்பாசனம் அமைத்திடலாம்.

நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வேளாண்துறை மூலம் 600 ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர்பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.2.77 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 200 ஹெக்டேர் வரை இலக்கீடு பெறப்பட்டு விவசாயிகள் தேர்வு செய்யப்படும் பணி நடைப்பெற்றுவருகிறது.
இத்திட்டத்தில் 5.00 ஏக்கர் பரப்பளவு வரையில்,சிறுகுறுவிவசாயிகளுக்கு சிறுகுறு விவசாயி சான்றின் அடிப்படையில்100 சதவீத மானியத்தில் நுண்ணீர்பாசனம் அமைப்பு நிறுவப்படும்.
ஏனைய பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் நுண்ணீர்பாசன அமைப்பு நிறுவப்படும். நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற சிட்டா, அடங்கல், ஆதார், குடும்ப அட்டை நகல், சிறுகுறு விவசாய சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படத்துடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் மூலம் குறைந்த நீரில் அதிகபரப்பில் சாகுபடி செய்யலாம். வாய்க்கால்வழி நீர்விரயம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு நீர்பயன்பாட்டு திறன் அதிகரித்து, பயிர் வறட்சியால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. மேலும் உர பயன்பாடும் குறைக்கப்படுகிறது. களைகள் வளர்ச்சி மற்றும் பூச்சி, நோய்தாக்குதலும் குறைவாகவே உள்ளது.
விவசாயிகள் நுண்ணீர்பாசனம் பதிவு மேற்கொள்கையில் இத்திட்டத்துடன் தொடர்புடைய துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்திலும் பதிவு செய்து பயனடையலாம். நீர் சேகரிப்பு அமைப்பு அல்லது பண்ணை குட்டை நிறுவிட 50 சதவீத மானியம்-அதிகபட்சமாக ரூ.75000/-வரை வழங்கப்படுகிறது. ஆழ் குழாய்கிணறு அல்லது ஆழ்துளைகிணறு அமைத்திட 50 சதவீத மானியம்- அதிகபட்சமாக ரூ.25000/-வரை வழங்கப்படுகிறது.
நீர் கடத்தும் குழாய் அமைத்திட 50 சதவீத மானியம்- அதிகபட்சமாக ரூ.10000/-/ஹெக்டர் வரை வழங்கப்படுகிறது. நீர் ஏற்றும் கருவி அல்லது மின்மோட்டார் அல்லது ஆயில் மோட்டாருக்கு 50 சதவீத மானியம்- அதிகபட்சமாக ரூ.15000/-வரை வழங்கப்படும்.
எனவே விவசாயிகள் குறைந்த நீர் செலவில் அதிக பரப்பளவில் பயிர்சாகுபடி மேற்கொள்ள நுண்ணீர் பாசனத் திட்டத்திலும், துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்திலும் பதிவு செய்து பயனடையும்படி கேட்டுக்கொள்கிறேன்,.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.







