ஆடிப்பூர வளைகாப்பு விழா ; பக்தர்களுக்கு வளையல்கள் விநியோகம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று ஆடிப்பூர வளைகாப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி ஆகிய பூஜைகள் நடந்தன.

காலை 8 மணிக்கு விளா பூஜை, பகல் 11.30 உச்சி கால பூஜை ஆகியவை நடந்தது. மாலை, 4.30 சாயரட்சை பூஜை நடந்தது. 5 மணிக்கு மூலவர் செண்பகவல்லி அம்மனுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு, மடியில் பாசிப்பயறு வைத்து கட்டப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜைகள் சுரேந்தர் பட்டர் தலைமையிலான பட்டர்கள் செய்திருந்தனர். நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அறங்காவலர் குழுத்தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் நிறுத்திய லட்சுமி, ரவீந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு படைக்கப்பட்ட வளையல்கள் மற்றும் மங்கல பொருட்கள் , பகதர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) வள்ளிநாயகம், ஆய்வாளர் சிவகலைப்பிரியா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.







