வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி மரணம்
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 60. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அமுல் கந்தசாமி இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி காலமானார்.

எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளராக பொறுப்பு வகித்தார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அமுல் கந்தசாமி (வயது 60). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அமுல் கந்தசாமியை மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்எல்ஏ, நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பிற்பகல் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பிற்பகல் 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் உயிரிழந்தச் செய்தி கேட்டு குடும்பத்தினர்கள் கதறி அழுதனர். அதிமுக தொண்டர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.







