100 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளங்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சூரியமினிக்கன் கிராமத்தில் பஞ்சாயத்து யூனியனுக்கு சொந்தமான குளத்தின் அருகில் தனியார் சோலார் நிறுவனத்தின் மூலம் 6 மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. .

நீர் பிடிப்பு பகுதியில் உள்ளதால் இந்த மின் கோபுரங்களை அகற்ற வேண்டும் என்று சூரியமினிக்கன் கிராமத்தைச் சேர்ந்த வேல்முத்து மகன் சரவணன் (27) என்பவர் கயத்தார் யூனியன், பேரூராட்சி அதிகாரிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோருக்கு மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் மின் கோபுரங்களை அகற்ற வலியுறுத்தி அவர் இன்று அதிகாலையில் 5 மணியளவில் 100 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
. இது குறித்து தகவல் அறிந்த கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா தேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுந்தர்ராஜ் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மின் கோபுரத்தை அகற்ற உறுதி அளித்தால் மட்டுமே கீழே இறங்குவதாக கூறினார். தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசரம் செய்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த வாலிபர் கீழே இறங்கி வந்தார்,







