கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை தாங்கி , மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்கள் நலச்சங்க மாநில இணைச் செயலாளர் நீதிப்பாண்டியன் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:-

, ஜூலை 7-ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. விழாவை மாற்றுத்திறனாளிகளும் காணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவமான அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தன்னை அணுகுவதற்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் அழைப்பு மணி வசதி ஏற்படுத்திய போல், தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்திலும், மாவட்டத்தில் உள்ள உட்கோட்ட காவல் அலுவலகங்களிலும் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்,
இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்..

தொடர்ந்து, இலவச வீட்டுமனை பட்டா, அரசு பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் வழங்கினர்.
இதற்கிடையே, திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனத்தில் தங்கி சிகிச்சை பெற்ற விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பெருமாள்சாமி மகன் கோபிநாத்(35) என்பவர் குணமடைந்ததை தொடர்ந்து, கோட்டாட்சியர் மகாலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் முன்னிலையில், கோபிநாத் சகோதரர் ரமேஷிடம் ஒப்படைத்தார்.







