ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி; சென்னை, மதுரையில் டிசம்பர் மாதம் நடக்கிறது
ஜூனியர் ஆண்கள் உலககோப்பை ஆக்கி போட்டிக்கான லோகோவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது:-
சென்னை மற்றும் மதுரையில் மற்றொரு சர்வதேச விளையாட்டு போட்டியை- ஜூனியர் ஆண்கள் உலககோப்பை ஆக்கி போட்டியை – நடத்த தமிழ்நாடு தயாராகி வருகிறது என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

நமது திராவிட மாடல் அரசாங்கத்தின் கீழ், போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் மொத்தம் ரூ,65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முறையான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இன்று போட்டிக்கான `லோகோ’ வெளியிடப்பட்டது. இந்த மதிப்புமிக்க போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் ஆக்கி இந்தியா இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 24 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.
சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கான மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதில் தொடர்ச்சியான ஆதரவு அளித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆண்கள் ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை 2025 தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.








