கோவில்பட்டியில் ஆக்கிப்போட்டி : இன்றைய காலைப்போட்டியில் சென்னை இன்கம்டேக்ஸ்- தமிழ்நாடு லெவன் அணிகள் ஆட்டம் `டிரா’

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில், இலட்சுமி அம்மாள் நினைவுக்கோப்பைக்கான \அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் 23ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது.
காலையில் நடந்த போட்டி
போட்டியின் ஐந்தாம் நாளான இன்று 27ம் தேதி காலை 7. மணி அளவில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் சென்னை இன்கம்டேக்ஸ் ஆக்கி அணியும், சென்னை தமிழ்நாடு லெவன் ஆக்கி அணியும் மோதின.
இப்போட்டியில் சென்னை இன்கம் டேக்ஸ் ஹாக்கி அணி வீரர் நவீன் 25வது நிமிடத்தில் (பெனால்டி கார்னர்) மற்றும் அருண் குமார் 29வது நிமிடத்தில் (பீல்டு கோல்) அடித்தனர்

சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணி வீரர் விஷால் 40வது மற்றும் 42வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்தார்.
இரு அணியினரும் விளையாடிய சிறப்பான ஆட்டம் காரணமாக அடுத்து யாரும் கோல் போடவில்லை. இறுதியில் 2:2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது..
சுப்பையா தாஸ் மற்றும் பிரவீன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணி வீரர் விஷால்-க்கு வழங்கப்பட்டது.

மாலை நடக்கும் போட்டிகள்
மாலை 5 மணியளவில் நடைபெறும் 18வது லீக் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதுகின்றன.
மாலை 6.30 மணியளவில் நடைபெறும் 19வது லீக் போட்டியில் சென்னை அக்கவுண்டெண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணியும், மும்பை யூனியன் வங்கி அணியும் மோதுகின்றன.
இரவு 8 மணியளவில் நடைபெறும் 20வது லீக் போட்டியில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணியும், கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன.

நேற்றைய மாலை போட்டிகள்
நேற்று மாலை 5. மணியளவில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் சென்னை இன்டர்க்ரல் கோச் பேக்டரி அணியும், பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணியும் மோதின.
இப்போட்டியில் பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணி வீரர் ராகுல் 4வது, 15வது மற்றும் 23வது நிமிடங்களில் 3 பீல்டு கோல்களும், அதே அணி வீரர் ஆர்யன் உத்தப்பா 14வது நிமிடத்திலும், நகுல் மால்நாத் 54வது நிமிடத்திலும் பீல்டு கோல் முறையில் தலா ஒரு கோல் அடித்து மொத்தம் 5 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
சென்னை இன்டர்க்ரல் கோச் பேக்டரி அணியால் ஒரு கோல் கூட போடமுடியவில்லை. இதில் 5:0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணி வெற்றி பெற்றது.
சுப்பையா தாஸ் மற்றும் அஸ்லாம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணி வீரர் ராகுல்-க்கு வழங்கப்பட்டது.

மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதின.
இதில் 4:2 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றிப் பெற்றது.
இப்போட்டியில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர் கார்த்தி 34வது (பெனால்டி கார்னர்), 39வது (பெனால்டி ஸ்டோக்) மற்றும் 40வது (பீல்டு கோல்) நிமிடங்களில் 3 கோல்களும், அதே அணி வீரர் விகாஷ் 36வது நிமிடத்தில் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்து மொத்தம் 4 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றி சேர்த்தனர்.
சென்னை தமிழ்நாடு போலீஸ் அணி வீரர் மதன் 43வது மற்றும் 56வது நிமிடங்களில் பெனால்டி கார்னர் முறையில் இரு கோல்கள் அடித்தார்.
சரவணன் மற்றும் ராஜீவ் ரத்தன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர் பிரதீப் சிங் மோர்-க்கு வழங்கப்பட்டது.

இரவு 8. மணியளவில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் மும்பை சென்ட்ரல் ரெயில்வே அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதின.
இப்போட்டியில் பெங்களூரு கனரா வங்கி அணி வீரர் நிதிஷ் ஷர்மா 19வது நிமிடத்திலும் மற்றும் 41வது நிமிடத்தில் பிருத்விராஜும் தலா ஒரு பீல்டு கோல் அடித்தனர்.
மும்பை சென்ட்ரல் ரெயில்வே அணி வீரர் முஹம்மது நிஜாமுதீன் 38வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டோக் முறையில் பதிலுக்கு ஒரு கோல் அடித்தார்.அதன்பிறகு யாரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் 2:1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கனரா வங்கி அணி வெற்றி பெற்றது.
பாலாஜி குமார் மற்றும் அஜித் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது பெங்களூரு கனரா வங்கி அணி வீரர் தயாளன் ஜக்தீப் தயாள்-க்கு வழங்கப்பட்டது.
