சாத்தான்குளம் அருகே பெண் கொலை: 4 மணி நேரத்தில் குற்றவாளி கைது

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட தட்டார்மடம் காவல் நிலைய எல்லையான முதலூர் பகுதியில், நேற்று 22-ஆம் தேதி இரவு நடந்த மோதலில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார்.
முதலூரைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 43) என்பவரது குடும்பத்தினருக்கும், சாத்தான்குளம் ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் (23) என்பவருக்கும் இடையே, முத்துக்கிருஷ்ணனின் 15 வயது மகள் காதல் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடுகளும் தகராறுகளும் ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில், சம்பவத்தன்று முத்துக்கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்ற ஞானப்பிரகாஷ், அங்கிருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் முத்துக்கிருஷ்ணன், அவரது மனைவி மேரி விஜிலா (39) மற்றும் அவர்களது 12 வயது மகன் ஆகியோர் அரிவாளால் தாக்கப்பட்டனர்.
இதில் மேரி விஜிலா உயிரிழந்தார். காயமடைந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது மகன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சம்பவத்தின்போது வீட்டில் இருந்த இரண்டு சிறுமிகளை ஞானப்பிரகாஷ் தன்னுடன் அழைத்துச் சென்று தனது வீட்டில் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர்
முதலூரில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தட்டார்மடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து சாத்தான்குளம் ஆனந்தபுரத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் ஞானப்பிரகாஷ் (23) என்பவரைச் சம்பவம் நடைபெற்ற 4 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்

.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி சரக போலீஸ் டி.ஐ.ஜி திருநாவுக்கரசு இன்று (அக்டோபர் 23) முதலூரில் கொலை நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சம்பவத்தின் பின்னணி மற்றும் காவல்துறையினரின் விசாரணை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த அவர், வழக்கில் தொடர்புடைய விவரங்களை முழுமையாகச் சேகரித்து, விசாரணையை விரைவுபடுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.







