மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கேட்டு கிராம மக்கள் போராட்டம்
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பூரணம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
அவர்கள், அடிக்கல் நாட்டு பணியுடன் நிறுத்தப்பட்டுள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி பணிகளை தொடங்கி வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:-
: பூரணம்மாள் காலனியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் நாங்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறோம். எங்கள் ஊராட்சி தலைவரின் மூலம் அரசால் பரிந்துரைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவ.17-ம் தேதி பூரணம்மாள் காலனியில் பூமி பூஜை நடந்தது.
அதை தொடர்ந்து எந்தவித பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இதனால் கடந்த ஜன.28-ம் தேதி மனு வழங்கினோம். அப்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தரப்படும் என அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. விரைவில் பணிகள் தொடங்கவில்லையென்றால் நாங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.









