போலி பத்திரம் பதிவு செய்து 300 ஏக்கர் நிலம் மோசடி: கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.
கயத்தாறு வட்டத்துக்கு உட்பட்ட முடுக்கலான்குளம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்களை போலி பத்திரம் பதிவு செய்து மோசடி செய்த தனியார் நிறுவனங்களை கண்டித்தும், அந்த பத்திரங்களை ரத்து செய்து உரிய விவசாயிகளிடம் திரும்ப வழங்க வலியுறுத்தியும், இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ராமசுப்பு தலைமை தாங்கினார் முடுக்கலான்குளம் கிராமத்தைச் சேர்ந்த முண்டசாமி,முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் புவிராஜ், மாவட்ட துணை செயலாளர் மணி, மாவட்ட துணை தலைவர் ராமசுப்பு, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில முன்னாள் துணை தலைவர் முத்துக்காந்தாரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில் முடுக்கலான்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் தலைமை எழுத்தர் காசிராஜனிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு தெரியாமல் மேற்கொண்டுள்ள போலி பத்திரப்பதிவை ரத்து செய்து, விவசாயிகளின் நிலத்தை பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைக்கவில்லையென்றால் அடுத்தகட்டமாக கிராம விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், மாவட்ட செயலாளர் புவிராஜ் தெரிவித்தார்.







