தீவரமடையும் காற்று மாசு: தலைநகராக இனியும் டெல்லி இருக்க வேண்டுமா? காங்கிரஸ் எம்.பி கேள்வி
டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருகின்றது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின் படி நேற்று காலை நகரின் பல இடங்களில் காற்றின் தர குறியீடு 500-ஐ தாண்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் தலைநகராக இனியும் டெல்லி இருக்க வேண்டுமா என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளபக்கத்தில் சசி தரூர் கூறியிருப்பதாவது:-
அதிகாரப்பூர்வமாக உலகின் மிக மாசடைந்த நகரமாக டெல்லி உள்ளது. 2-வது இடத்தில் உள்ள வங்கதேச தலைநகரான தாக்காவை விட 4 மடங்கு அபாயகரமான நச்சுத்தன்மை வாய்ந்த நகராக டெல்லி இருக்கின்றது. இந்த கொடுமையை பல ஆண்டுகளாக நமது அரசு நிர்வாகம் பார்த்து வருகிறது. ஆனால், அதற்காக எந்த முயற்சியையும் எடுக்காமல் இருப்பது மனசாட்சிக்கு விரோதமானது.
நான் கடந்த 2015-ம் ஆண்டு முதல் காற்றின் தரம் குறித்து விவாதிக்க எம்.பி.க்கள் உள்பட வல்லுநர்கள், பங்குதாரர்கள் ஆகியோருடன் வட்ட மேசை மாநாடு நடத்தி வந்தேன். ஆனால், எதுவும் மாறாததாலும், இது குறித்து யாரும் கவலைப்படாததாலும் கடந்தாண்டு முதல் இதனை கைவிட்டுவிட்டேன்.
இந்த நகரம் நவம்பர் முதல் ஜனவரி வரை வாழ தகுதியற்ற நிலையிலும், மற்ற மாதங்களில் சிரமப்பட்டு வாழும் நிலையிலும் இருக்கிறது. இது இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா..
இவ்வாறு சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.







