• June 7, 2025

விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பம் மூலம் உயிரூட்டிய கிருஷ்ண சேத்தன்

 விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பம் மூலம் உயிரூட்டிய கிருஷ்ண சேத்தன்

கிருஷ்ண சேத்தன்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் இடம்பெறும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இசை அமைப்பாளர்  ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான‌ டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா.

நடிகர்  ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி ‘திமிரி எழுடா’ என்ற உத்வேக‌மூட்டும் பாடலை கிருஷ்ண சேத்தன் உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி இருந்தார்.

இந்த பாடலைக் கேட்ட யுவன் ஷங்கர் ராஜா, கோட் திரைப்படத்தில் இடம்பெறும் குடும்ப பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக பவதாரிணியின் குரலை பயன்படுத்த விரும்பி கிருஷ்ண சேத்தனை அணுகினார்.

இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக பெரிதும் மகிழ்ந்த கிருஷ்ண சேத்தன், பவதாரிணியின் குரல் மாதிரிகளை யுவன் ஷங்கர் ராஜா அலுவலகத்தில் இருந்து பெற்று, 3 நாட்கள்  தனது குழுவினருடன் உழைத்து செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்கு அதை பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து கிருஷ்ண சேத்தன் கூறியதாவது:-

பவதாரிணி குரல் மிகவும் விசேஷமானது, தனித்தன்மை மிக்கது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் வாய்ப்பை அளித்த யுவன் ஷங்கர் ராஜாவுக்கு மனமார்ந்த நன்றி. இந்த பாடலைக் கேட்டு யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர்  மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். இசைஞானி இளையராஜாவையும் சந்தித்து வாழ்த்து பெற்றேன்,

பாடகர்கள் மற்றும் நடிகர்களின் குரலைப் பாதுகாத்து செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தேவைக்கேற்ப அதை சரியான முறையில் பயன்படுத்துவதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்காக மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மனோபாலா ஆகியோரின் குரல்களை பயன்படுத்தும் பணியில் கிருஷ்ண சேத்தன் மற்றும் அவரது டைம்லெஸ் வாய்சஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *