நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சி வெற்றி பெற என். ஆர். தனபாலன் வாழ்த்து

பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றி கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் திரையுலகில் உச்சத்தை தொட்டது போல் தமிழக அரசியல் களத்திலும் உச்சத்தை தொட வேண்டும்.
நாடு முழுவதும் அரசியல் களம் சீரழிந்து வருவதைக்கண்டு மனம் வெதும்பிய நடிகர் விஜய், அதைத்துடைத்தெறியும் முயற்சியில் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
நாடு முழுவதும் போதைப்பழக்கத்திற்கு அடிமையான ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி காண வேண்டும். கையூட்டு பெறும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை அப்புறப்படுத்திவிட்டு தூய்மையான நிர்வாகத்தை கொடுக்கும் பொறுப்பை ஏற்கும் சூழலை உருவாக்கிட வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவு தமிழகத்தில் மீண்டும் நனவாகிட உங்கள் முயற்சி வெற்றி பெறவேண்டும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் தமிழக மக்களின் நலன் பாதுகாக்கப்படுவதாக அமைய வேண்டும். உங்களுடைய எதிர்கால அரசியல் மீண்டும் பெருந்தலைவர் காமராஜரை நினைவூட்டுவதாக அமையவேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு என்.ஆர்.தனபாலன் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
