கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை; மத்திய ரெயில்வே மந்திரியிடம் வைகோ நேரில் வலியுறுத்தல்
மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வை ம.தி.மு.க.பொதுசெயலாளர் வைகோ டெல்லியில் நேரில் சந்தித்தார். கணேசமூர்த்தி எம்.பி. உடன் சென்று இருந்தார்.
இந்த சந்திப்பின் போது மத்திய மந்திரியிடம் வைகோ, ஒரு கடிதத்தை வழங்கினார். அதில் அவர் கூறி இருந்ததாவது:-
தென்காசி மாவட்டத்தின் பழைமையான கரிவலம்வந்தநல்லுர் ரேயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும், ராஜபாளையம் – சங்கரன்கோவில் மார்க்கத்தில் 32 கி.மீ. தூர இடைவெளியில் வேறு ரெயில் நிலையங்களே இல்லாத நிலையில் கரிவலம் வந்த நல்லூர் ரெயில் நிலையம் திறக்கப்பட்டால், அந்த வழித்தடத்தில் பயண நேரம் குறையும்.காசிக்கு இணையான புகழ் பெற்ற பால்வண்ணநாதர் பெயர் தாங்கிய சிவ ஆலயம் இங்கு அமைய பெற்றுள்ளது.
சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 24 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், நெசவாளர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பயன் பெறுவர்
20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ரெயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். அத்துடன் பாழடைந்து கிடக்கும் பணியாளர் குடியிருப்புகள் சீரமைக்கப்பட்டு தனி பயணச்சீட்டு மையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரெயில் தென் மாவட்ட மக்களுக்கு பயன் அளித்து வருகிறது.. தெற்கு ரெயில்வேக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும் வர்த்தக நகரம் கோவில்பட்டி. எனவே வந்தே பாரத் ரெயிலை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று 21.9.2023 நாளிட்ட கடித வாயிலாகவும், நேரிலும், வலியுறுத்தினேன். தற்போதும் நேரில் வலியுறுத்துகிறேன்.
பொதுமக்களும், வர்த்தகர்களும் அன்றாடம் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். அதி முக்கியத்துவம் வாய்ந்த இக் கோரிக்கையினையும் விரைந்து நிறைவேற்றித் தர வேண்டுகிறேன் ..
ஈரோடு – திருநெல்வேலி (இரயில் எண்கள் 16845 | 16846) ரெயிலைதிருநெல்வேலியில் இருந்து பத்தமடை, சேரன்மகாதேவி, கல்லடைக்குறிச்சி அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டித்து இயக்கிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.







