கோவில்பட்டியில் இருந்து வேம்பாருக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம்; கடலில் சிலைகளை கரைக்க ஏற்பாடு
கோவில்பட்டி நகரம், ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி 45 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலைகளுக்கு தினமும் காலை, மாலையில் பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று மாலையில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் தனித்தனி வாகனங்களில், மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக லட்சுமி மில் மேம்பாலம் முன்பு கொண்டு வரப்பட்டன.
அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை இந்து முன்னணி நகர தலைவர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தலைமையில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், முன்னிலையில் நெல்லை கோட்ட தலைவர் தங்க மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க மெயின் ரோடு, புது ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு இரவில் நிறைவடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி தேவானந்த், வனசுந்தர் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
கயத்தாறு, கழுகுமலை பகுதிகளில் பிரதிஸ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்த விநாயகர் சிலைகளும் அங்கிருந்து ஊர்வலமாக் செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.



இன்று(வியாழக்கிழமை) பகல் 12 மணி அளவில் செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. விநாயகர் சிலைகள் அனைத்தும் வேன்களில் ஏற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கிளம்பின.
கதிரேசன் கோவில் ரோடு, பார்க் ரோடு, மெயின்ரோடு, புதுரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக விநாயகர் சிலைகள் வேம்பார் கொண்டு செல்லப்பட்டன.
ஒவ்வொரு வேனிலும் விநாயகர் சிலைகள் இருந்தன, மேலும் இளைஞர் கள் உற்சாகத்துடன் ஆடிப்பாடி சென்றனர். வேம்பார் சென்றதும் அங்கு கடலில் கரைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.







