‘என் மண்’ ‘என் மக்கள்’: கோவில்பட்டியில் 11-ந் தேதி அண்ணாமலை நடைபயணம்
ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லும் வகையிலும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண்’ ‘என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மாதம் 28-ந் தேதி ராமேசுவரத்தில் தொடங்கிய இந்த பயணத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். நடை பயணத்தின் போது மக்களை சந்திக்கும் அண்ணாமலை, அவர்கள் கொடுக்கும் மனுக்களையும் வாங்கி அவற்றுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். நடை பயணத்தின் போது அவ்வப்போது ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலையின் நடைபயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 6 மற்றும் 7 -ந்தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இன்று(செவ்வாய்க்கிழமை) நடை பயணம் ரத்து செய்யப்பட்டது. நாளை (புதன்கிழமை) மீண்டும் அண்ணாமலை தனது நடை பயணத்தை தொடங்குகிறார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் தொடங்கி அருப்புக்கோட்டை, விருதுநகர்,சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
பின்னர் 11-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவில்பட்டியில் தனது பயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

இனாம் மணியாச்சி சந்திப்பில் இருந்து நடை பயணம் புறப்படும் அண்ணாமலை, லட்சுமி மில், பத்மா மருத்துவமனை, கிழக்கு பார்க்ரோடு ராஜ் மகால், கதிரேசன் கோவில் ரோடு, எட்டயபுரம் ரோடு, தலைமை தபால் ஆபீஸ், புதுரோடு சந்திப்பு, அரசு மருத்துவமனை, அருண் பேக்கரி, புதுரோடு இறக்கம், மெயின்ரோடு, காமராஜர் சிலை, சத்யபாமா தியேட்டர், மெயின்ரோடு வழியாக அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலை முன்பு நடைபயணத்தை முடிக்கிறார். மொத்தம் 5.1 கி.மீ.தூரம் அண்ணாமலை நடக்கிறார்,
நடை பயணத்தில் அண்ணாமலையுடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சென்னகேசவன் வெங்கடேசன், மாநில பொதுசெயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் மாவட்ட தலைவர் போத்தீஸ் ராமமூர்த்தி, ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் அம்மன் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் நடந்து செல்கிறார்கள்.
நடை பயணம் முடிந்ததும் அண்ணாமலை, கோவில்பட்டியில் இரவு தங்குகிறார். மறுநாள் 12-ந்தேதி எட்டயபுரத்தில் தனது நடை பயணத்தை தொடங்கும் அண்ணாமலை விளாத்திகுளம் , ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நடை பயணம் மேற்கொண்டபிறகு தூத்துக்குடியில் இரவு தங்குகிறார்.







