கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பிரமாண்ட திருமண மண்டபம்; பூமி பூஜை நடந்தது
கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட எஸ்.எஸ்.டி.எம். கலைக்கல்லூரிக்கு அருகில் பிரமாண்ட திருமண மண்டபம் அமைக்கப்பட இருக்கிறது.
சங்கத்திற்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மண்டபம் அமைய இருக்கிறது. 200 அடி நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட இருக்கும் இந்த மண்டபத்தில் 2 ஆயிரம் பேர் வரை அமரலாம். மேடையும் மிக பிரமாண்டமாக இருக்கும். மேடையின் இருபுறமும் மணமகன், மணமகள் என தனித்தனி அறைகள் இருக்கும். மைதானத்தில் 1,000 கார்கள் வரை நிறுத்திக்கொள்ளலாம் .
நாடார் உறவின் முறை சங்கத்தின் கட்டுப்பாட்டில் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மெட்ரிக்குலேசன் மற்றும் சி,பி.எஸ்.இ. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்லூரி மற்றும் பள்ளிகளின் விழாக்கள் நடைபெற தனியாக மேடை அமைத்து நடத்துவதற்கு ஆகும் செலவை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மண்டபத்திலேயே பள்ளி விழாக்களை நடத்தலாம் என்று சங்கம் முடிவு செய்து இருக்கிறது.

அதன் அடிப்படையில் திருமண மண்டபம் கட்டுவதற்கு வாஸ்து செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபால், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், சங்க உறுப்பினர்கள் எஸ். கண்ணன், விஜயகுமார், டி. ஆர்.கண்ணன், சேகர் , பத்திரகாளி அம்மன் கோவில் செயலாளர் மாணிக்கம், தர்மகர்த்தா மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







