மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள்; முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பேட்டி
சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாடு கண்டதில்லை என்கிற வகையில் மதுரை அ.தி.மு.க. மாநாடு மகத்தாக அமையப்போகிறது. ஏற்கனவே கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாட்டிற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறிப்பாக மதுரையை சுற்றியுள்ள தலைமை கழக நிர்வாகிகள் அனைவரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் 11 மாவட்டங்களில் கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை ஒவ்வொரு தொண்டரும் இந்த மாநாட்டிற்கு செல்ல வேண்டும் என இன்றைய தினம் ஆர்வத்தோடு தமிழ்நாடு முழுவதும் கழகத் தொண்டர்கள் மத்தியில் பொதுமக்களும் வரவேண்டும் என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்தின் படி மொத்தம் 15 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு உணவு வசதி சுகாதார வசதிகள் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம் செய்து தரவேண்டும் என்ற வகையிலும் இந்த கூட்டம் இன்றைக்கு நடைபெற்றது.வாகனங்கள் மட்டுமே 40 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்வது வாகனங்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்வது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சிக்க முடியாது. எனவே ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்பது உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
அ.தி.மு.க.மற்றும் பா.ஜ.க. இடையே அடிக்கடி ஏற்படும் விமர்சனங்கள் என்பது, அ.தி.மு.க.வை தொட்டால் கெட்டார் என்று அவருக்கு அண்ணாமலைக்கு தெரியும். ஏற்கனவே கூறியது போல ஏற்கனவே இது போன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு. செல்லூர் ராஜூவாக இருந்தாலும் அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் யாராயிருந்தாலும் விமர்சனம் செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை விமர்சனம் செய்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்கக்கூடிய சூழல் கண்டிப்பாக ஏற்படும். அந்த நிலைமைக்கு அண்ணாமலை ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.







