எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்: அன்வர் ராஜா அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பு
அ.தி.மு.க.வில் இரண்டு அணிகளாக இருந்த போது எடப்பாடி பழனிசாமி அணியில் இடம்பெற்று இருந்த முன்னாள் எம்.பி, அன்வர்ராஜா, 2 ஆண்டுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கட்சியின் பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரது தேர்வினை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இதை தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா இன்று சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.
கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இதை தொடர்ந்து அவர் மீண்டும் அ.தி.மு.க. வில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அப்போது தலைமைக்கழக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உடன் இருந்தனர்,
அன்வர் ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஓராண்டுக்கு முன்னர் நீக்கப்பட்டேன். இப்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு வந்து, அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். கட்சியின் கொள்கைகளுக்கு உடன்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் எனக்கு வருத்தமில்லை. கட்சியில் இருந்து விலகி இருந்தாலும் கட்சியினர் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தேன், என்னை யாரும் தடுக்கவில்லை. கட்சியினர் அனைவருடனும் தொடர்பில் தான் இருந்தேன். இந்தியாவில் காங்கிரசை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளன. எனக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் தேவையில்லை. மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும்
இவ்வாறு அன்வர்ராஜா கூறினார்.
சசிகலாவுக்கு ஆதரவாக பேசியவர்
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய நாள் முதலே அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா. அவருக்கு, 1986-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில்தான் முதன்முறையாக வாய்ப்பளித்தார் எம்.ஜி.ஆர்..
அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த தேர்தல் அதுதான். தி.மு.க. ஆதரவு அலை வீசிய அந்த உள்ளாட்சித் தேர்தலில், மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் அன்வர் ராஜா.
பின்னர், மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் அன்வர் ராஜாவை அழைத்துப் பேசவைத்த எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வின் அதிகாரம் வாய்ந்த குழுக்களுள் ஒன்றான 15 பேர் கொண்ட ஆட்சிமன்றக் குழுவில் அன்வர் ராஜாவையும் சேர்த்துக்கொண்டார். அவர்களில் 13 பேர் அமைச்சர்கள். அமைச்சர்கள் அல்லாத இருவர், அன்வர் ராஜாவும் ஜெயலலிதாவும் மட்டுமே.
எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. உடைந்தபோது ஜானகி எம்.ஜி.ஆரின் பக்கம் நின்ற அன்வர் ராஜா, 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் .அதி.மு.க ஜானகி அணி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பிறகு, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அ.தி.முகவில் சேர்ந்துகொண்டார். அந்த நாள் தொடங்கி, வென்றாலும் தோற்றாலும் அ.தி.மு.க.வே என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் அன்வர் ராஜா.
அ.தி.மு.க.வில் இருக்கும் சிறுபான்மை சமூகத்து மக்களின் பிரதிநிதியாக இருந்த அன்வர் ராஜாவுக்கு, 2001 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாநில அமைச்சர் பதவி கிடைத்தது. தொழிலாளர் நலத் துறை அமைச்சராகச் செயல்பட்டார். திடீரென அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா, பிறகு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் பக்கம் நின்றார். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு .ஆதரவு எனும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பேசிவந்த அன்வர் ராஜாவுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.
ஆனாலும் அ.தி.மு.க.விலேயே தொடர்ச்சியாக நீடித்துவந்த அன்வர் ராஜா, திடீரென அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை தேவைப்படுகிறது என்றார். சசிகலாவுக்கு ஆதரவான வார்த்தைகளையும் வெளிப்படுத்தினார். எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் கடந்த 2021-ல் அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டார். இந்தநிலையில்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இன்று மீண்டும் சேர்ந்து இருக்கிறார்.







