மாதிரி வாக்குப்பதிவு மூலம் மின்னணு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி; கலெக்டர் ஆய்வு
2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்து, முதல் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில், 2024 – பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்கள் (VVPATs) முதல்நிலை சரிபார்ப்பு பணி 4-7-2023 அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதல் நிலை சரிப்பார்ப்பு பணியானது நேற்று (28-7-2023 )டன் முடிவடைந்து விட்டதால், அதை தொடர்ந்து, இன்று (29-7-2023 ) காலை 9.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவானது தேர்ந்தெடுக்கப்படும் 5% எந்திரங்களில், 1% எந்திரங்களில் 1200 வாக்குகளும், 2% எந்திரங்களில் 1000 வாக்குகளும், 2% எந்திரங்களில் 500 வாக்குகளும் நடைபெற்று வருகிறது. இதற்காக 30 மேஜைகளில், 90 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்பணிமுடிவடைந்த பின்பு, முதல் நிலை சரிபார்ப்பு பணியில் சரி வர செயல்படும் எந்திரங்கள் (FLC OK units) அடங்கிய வாக்கு பதிவு எந்திரங்கள் வைத்துள்ள பாதுகாப்பு அறையானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீலிடப்பட உள்ளது. அதன் பின்பு முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிவடைந்த 7 நாட்களுக்குள் முதல்நிலை சரிபார்ப்பு எந்திரங்களில் பழுதடைந்த எந்திரங்கள் பெங்களுருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது.
இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
ஆய்வின்போது தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) காமாட்சி கணேசன், தேர்தல் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி, தனி வட்டாட்சியர் (சிப்காட்) சந்திரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.







