என்.எல்.சி. போராட்டம்: 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம், நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்பட மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டம், அரசு அதிகாரி உத்தரவை மீறியது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்ட நிலையில், போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.
நெய்வேலி முற்றுகை போராட்டம் நடத்திய போது வன்முறையில் ஈடுபட்டதாக பாமகவை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 28 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 28 பேரும் கைது செய்யப்பட்டனர், அவர்கள் 28 பேரும் இன்று பகலில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.
28 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் மற்ற 26 பேரையும் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மூலம் கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
