தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். நேதாஜி பாலமுருகன் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,பொதுக்குழு உறுப்பினர் ஜி.ஆர்.சாமி நகர துணை செயலாளர் பாலு, மாவட்ட பிரதிநிதி மதிமுத்து, மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜாவிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பிரதமர் மோடியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்பட்டது. ஒரு குடியிருப்புக்கு ரூ.1.50 லட்சம் முதல் 3 லட்சம் வரை கேட்டதால் அதனை எங்களால் வழங்க இயலாததால் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ள இலவச வீட்டு திட்டத்தில் தங்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் அவரது நேரடி பார்வையில் வீடு வழங்க வேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக பலமுறை முதல்வருக்கும் கோவில்பட்டி கோட்டாட்சியரிடமும் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லாத காரணத்தினால் மாவட்ட ஆட்சியர் இவ்விஷயத்தில் நேரடியாக தலையிட்டு முதல்வரின் நேரடி பார்வையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.







