பலத்த எதிர்ப்புக்கு இடையே கோவில்பட்டி மார்க்கெட் கடைகள் இடிப்பு; இரவில் போராட்டத்தில் ஈடுபட்ட 14 வியாபாரிகள் கைது
கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் நகராட்சி தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி கடைகள். பழக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்தன,
கொவில்பட்ட்டி மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்களும் இங்கு வந்து காய்கறி வாங்கி செல்வது வழக்கம். எப்போது பரபரப்புடன் காணப்படும் இந்த மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உருவாக்கி விட்டன. கடைகள் எண்ணிகையானது நகராட்சி பட்டியலை விட அதிகமாகி விட்டன, நடைபாதை கடைகளும் முளைத்து விட்டன, இதன் காரணமாக மார்க்கெட்டுக்குள் கடும் நெருக்கடி நிலவியது, மக்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தை கூட கொண்டு செல்லமுடியாத நிலை உருவானது,.
இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான இந்த தினசரி மார்க்கெட்டில் கடைகளை இடித்து விட்டு 6.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250 கடைகள் கொண்ட தினசரி சந்தை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அரசும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டது.
இதை தொடர்ந்து மார்க்கெட் கடைகளை காலி செய்து விட்டு கூடுதல் பஸ் நிலையத்தில் தற்காலிகமாக கடைகள் ஒதுக்கபட்டன, ஆனால் மார்க்கெட் வியாபர்கள் அங்கு செல்ல மறுத்து விட்டனர். அங்கு பாதுகாப்பு இல்லை, என்று கூறி தொடர்ந்து இங்கேயே கடைகளை நடத்தி வநதனர். நகராட்சி நிர்வாகம் விடுத்த கெடுவை புறக்கணித்து வியாபாரிகள் தொடர்ந்து கடைகள் நடத்தி வந்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்,.


மேலும் வியாபாரிகள் தரப்பில் நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றம் கடைகளை இடிப்பதற்கு தடை விதிக்க மறுத்து விட்டது.. இதனால் கடந்த 14ந்தேதி வரை கடைகளை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் கால அவகாசம் கொடுத்தது. இருப்பினும் கடைகள் காலி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மார்க்கெட் நுழைவு பகுதியில் நகராட்சி நிர்வாகம் ஒரு போர்டு வைத்தது. அதில் “சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையின் தேசிய தீர்ப்பாணையின்படி கால அவகாசம் 14-ந்தேதியுடன் மார்க்கெட்டில் வணிகர்கள் வணிகம் செய்வதற்கான அவகாசம் முடிவடைகிறது. எனவே 17-ந்தேதி(இன்று) முதல் மார்க்கெட் கடைகள் இயங்காது” என்று கூறப்பட்டு இருந்தது,
இதை தொடர்ந்து நேற்றே சில கடைக்காரர்கள் தங்களுக்கு சொந்தமான பொருட்களை எடுக்க தொடங்கி விட்டனர். கடைக்கு முன்புறம் போட்டிருந்த தகர பலகைகள் போன்றவற்றை கழற்றினார்கள்.
மேலும் வியாபாரிகள் சிலர் ஒன்று கூடி மார்க்கெட்டுக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர், கடைகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அங்கேயே அமர்ந்து விட்டனர்.


அதிகாலை 3 மணி அளவில் சில மொத்த காய்கறி கடைகளில் வியாபாரம் நடந்தது, அவர்களிடம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சில்லரை வியாபாரிகள் காய்கறிகள் வாங்கி சென்றனர்,.
காலை 5.30 மணி அளவில் கடைகளை இடிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியது. 3 ஜே.சி.பி.இயந்திரங்கள் கொண்டு கடைகளை இடிக்கும் பணி நடந்தது.
இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எஸ்.ஆர்.பாஸ்கரன், செல்லத்துரை உள்பட 14 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்று ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதையடுத்து கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், தாசில்தார் சுசீலா, டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 3 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு கடைகள் அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நகராட்சி, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்..
நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து மார்க்கெட் சாலை மற்றும் கிருஷ்ணன் கோவில் தெரு, பூக்கடை தெரு, மெயின் ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கூடுதல் பஸ் நிலையத்தில் மாற்று இடமாக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது,.இதற்கிடையே தெற்கு திட்டங்குளம் பகுதியில் வியாபாரிகள் வாங்கி உள்ள இடத்திலும் கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது,.







