கோடைகாலம் ஆரம்பம்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்- தூத்துக்குடி மேயர் ஜெகன்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் வல்லநாடு நீரேற்று நிலையத்தை பார்வையிட்டேன். நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஆற்றில் வரும் நீர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் தொடர்ந்து கண்கானிக்குமாறும், நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றி உள்ள அமலைச் செடிகள் மற்றும் கிணற்றுக்குள் நீர் வருவதற்கு தடையாக இருக்கும் மணல் திட்டுகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்
மேலும் ஆற்றில் வரும் நீரின் அளவானது குறைவாக இருந்தாலும் தற்பொழுது வரை தடையில்லாமல் தண்ணீர் வழங்கி வருகிறோம்.
ஆகவே மாநகர மக்கள் கோடை காலம் ஆரம்பமாகி இருப்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி கூறி இருக்கிறார்.







