கோவில்பட்டியில் எச்.ராஜா காரை வழிமறிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேர் கைது
கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், கிருஷ்ணன் கோவில் திடலில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நேற்று மாலைகாரில் வந்தார்.
அவர் மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, கூட்டத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில், விருதுநகர் மாவட்ட செயலாளர் சதுரகிரி, மாநில துணை செயலாளர் இளஞ்சேரன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், ஒன்றிய செயலாளர் மாடசாமி, சட்டமன்ற தொகுதி செயலாளர் முருகன், நகரச் செயலாளர்கள் கருப்பசாமி, முத்துசாமி மற்றும் பலர் மந்தித்தோப்பு ரோடு சந்திப்பு மங்கள விநாயகர் கோவில் முன்பு தங்கள் கட்சி கொடியுடன் கூடி இருந்தனர்,.
அவர்கள் எச்.ராஜா வந்த காரை வழிமறிக்க முயற்சி மேற்கொண்டனர். இதுபற்றி அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் உத்தரவின் பேரில் போலீசார் அங்கு சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன் உள்பட 25 பேரை கைது செய்தனர்.