அ.தி.மு.க. பொதுசெயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டும் மனு தாக்கல்; முடிவை அறிவிக்க ஐகோர்ட்டு தடை
அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 17-ந் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் நடைமுறைகள் தொடங்கின. இந்த தேர்தலை நடத்தும் ஆணையாளர்களாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் 18-ந் தேதி (நேற்று முன்தினம்), 19-ந் தேதி (நேற்று) மதியம் 3 மணி வரை நடைபெறும் என்றும் அறிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினம் ரூ.25 ஆயிரம் விண்ணப்ப கட்டணம் செலுத்தி அவரது பெயரில் கட்சி நிர்வாகிகள் போட்டி போட்டு மனு அளித்தனர்.
இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்று மதியம் 3 மணியுடன் முடிந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி பெயரில் 224 பேர் மனு அளித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கு விசாரணை நேற்று பரபரப்பாக நடைபெற்ற வேளையிலும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மனு தாக்கல் விறுவிறுப்பாக இருந்தது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கட்சி நிர்வாகிகள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
எனவே வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்ததும் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற அறிவிப்பை கட்சியின் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வெளியிட இருந்தனர்.
அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களும் கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமியும் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்து நிர்வாகிகள், தொண்டர்களின் வாழ்த்துகளை பெற திட்டமிட்டிருந்தார். ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிப்பதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்ததால், அவை எதுவும் நடைபெறவில்லை.