ஈரோட்டில் 350 கோடிக்கு ரூபாய்க்கு மேல் செலவு செய்து போலியான வெற்றியை பெற்றுள்ளனர்; டி.ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று கட்சி பிரமுகர்களின் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்..
சென்னை கோடம்பாக்கத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபிறகு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும்,அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு
கேள்வி:- சமீபத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவி உள்ளீர்கள் என்று பேசப்படுகிறதே
பதில்:- ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் ஆளும் விடியா திமுக அரசுக்கு மிகப்பெரிய பயம் வந்துவிட்டது.அவர்கள் எந்த தேர்தலிலும் இதுபோன்று பயப்பட்டது கிடையாது. இந்த தேர்தலில்தான் பயந்து ஏறக்குறைய 350 கோடிக்கு மேல் செலவு செய்து ஒரு போலியான வெற்றியை இன்றைக்குப் பெற்றுள்ளார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவ்வளவு அடக்கு முறைகளை அதாவது முழுமையான அளவுக்கு அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு,அதிகார துஷ்பிரயோகத்தைச் செய்து,ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி,வாக்காளர்களை ஆடு மாடுகளைப் போலப் பட்டி தொட்டியில் அடைத்துவைத்து,நாங்கள் அனைவரும் வாக்காளர்களைச் சந்திக்க விடாமல் செய்து,தினந்தோறும் எங்களைச் சந்திக்காமல் இருப்பதற்கு 500 ரூபாய்,,எங்கள் கூட்டத்திற்கு வராமல் இருப்பதற்கு ரூ 500 என வழங்கியுள்ளார்கள்
இதுபோன்று எந்த காலத்திலும் நடந்ததுகிடையாது. காலையில் 500,மாலையில் 500 ரூபாய்.நடுவில் பிரியாணி,டிபன் வழங்கியுள்ளார்கள்.தேர்தல் முடிந்தபிறகு 10 ஆயிரம் ரூபாய்க்காக மளிகை சாமான் கூப்பன். கிட்டதட்ட 350 கோடி செலவு செய்து ஒரு மகத்தான வெற்றி என்றால் கிடையாது.இதனை எல்லாம் தாண்டி கிட்டதட்ட 45 ஆயிரம் பேர் வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என்றால் ஸ்டாலினைப் பொறுத்தவரையில் இது பெரிய ஏமாற்றம்தான்.எங்களைப் பொறுத்தவரையில் தோல்விகரமான வெற்றிதான் இது.அவர்களைப் பொறுத்தவரையில் வெற்றி கிடையாது.எங்களைப் பொறுத்தவரையில் பார்த்தால் நாங்கள்தான் வெற்றிபெற்றுள்ளோம்.அவர்கள் நினைத்தது டெபாசிட் இழந்துவிடுவோம் என்று.எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் சரி அதனைத் தாண்டி ஒரு மகத்தான செயலை மக்கள் செய்துள்ளார்கள்.

அதிமுகவுக்கு கிட்டதட்ட 46 ஆயிரம் மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள் என்றால் 350 கோடி செலவு செய்து பெற்ற வெற்றி வெற்றியே கிடையாது. திருமங்கலம் பார்முலா என்று சொல்லுவோம்.அது இனிமேல் போய்விட்டது.அது பழைய காலமாகப் போய்விட்டது.இப்போது இருப்பது ஈரோடு கிழக்கு தொகுதி பார்முலா.இதுவரை எந்த கட்சியும் இதுபோன்று சிந்திக்கவில்லை.எந்த நாட்டிலும்,எந்த மாநிலத்திலும் சிந்திக்கவில்லை.மக்களை ஆடு,மாடுகளைப் போல அடைத்துவைத்து தினமும் அவர்களுக்கு வேண்டியதைச் செய்த கட்சி உலகத்திலே விடியா திமுக அரசுதான்.இது அதற்காகக் கிடைத்த வெற்றிதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. உண்மையில் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி, அதன் மூலம் பெற்ற வெற்றி என்பது போலியான வெற்றிதான் என்று கருத முடியும்.
இன்றைக்கு தலைமை கழக நிர்வாகிகளிலிருந்து கிளைக் கழக செயலாளர் முதல் அத்தனைப்பேரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்..கட்சியைப் பொறுத்தவரையில் எழுச்சியாக உள்ளது.வேகமாக உள்ளது.வீறு கொண்டு, வரும் காலங்களில் மகத்தான வெற்றியைப் பெறும் அளவுக்கு கட்சியின் எழுச்சி உள்ளது.:-
கேள்வி : -இரண்டு ஆண்டுகால ஆட்சிக்கு நன்றி கடனாகத்தான் இந்த வெற்றியை அளித்துள்ளார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளாரே
பதில்:- தற்போது நடைபெற்றது இடைத்தேர்தல் .இதில் ஆளும் கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்து, அரசு இயந்திரத்தை முடக்கிவிட்டது., தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் நடக்கும் இடங்களில் வாகன சோதனை நடப்பது வழக்கம். நாங்கள் பல முறை புகார் மனு அளித்தோம்.எங்கும் சோதனை நடக்கவில்லை.செக் போஸ்ட் வைக்கவில்லை.உள்ளே வரும் வாகனத்தைச் சோதனை எதுவும் செய்யவில்லை.அவர்கள் அனைவரும் உள்ளே சென்று பணத்தை எளிதாக அளிக்கிறார்கள். ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில் பணத்தை நம்பி,பணத்தைப் பிரதானமாக நம்பி,350 கோடியைச் செலவு செய்துள்ளார்கள்.எனவே இந்த போலியான வெற்றி எந்த ஒரு தாக்கத்தையும் பாராளுமன்ற தேர்தலில் ஏற்படுத்தாது.இது மட்டும் உறுதி.இன்றைக்கு மக்களைப் பொறுத்தவரையில் திமுக ஆட்சி மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.இந்த இடைத்தேர்தலில் 30 அமைச்சர்களை இறக்கி,350 கோடி செலவு செய்து அதன் மூலம் அதிகார துஷ்பிரயோகத்தைச் செய்து எல்லாவிதமான ஜனநாயக கேலித்கூத்தை அரங்கேற்றி ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.இதுபோன்று 40 பாராளுமன்ற தேர்தலில் செய்ய முடியுமா என்றால் நிச்சயமாக செய்ய முடியாது. அமாவாசை சோறு என்றைக்கும் கிடைக்காது என்பதுபோல 2024 ல் அவர்கள் எவ்வளவுதான் பணத்தை வாரி இறைத்தாலும் சரி அன்றைக்கு நியாயம்,தர்மம்,ஜனநாயக என்ற அடிப்படையில் எங்களுக்கு முழுமையான ஆதரவினை தமிழக மக்கள் அளிப்பார்கள்.இதன் மூலம் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம்.திமுகவைப் பொறுத்தவரையில் பயத்தோடு இருந்தார்கள்.அந்த அளவுக்குப் பயத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.அதுவே மிகப்பெரிய வெற்றியாக நாங்கள் பார்க்கின்றோம்.
கேள்வி : – திமுக பணபலத்தால் வெற்றி பெற்றது என்றால் அதிமுக பணம் தராத காரணத்தினால் தோல்வி என்று எடுத்துக்கொள்ளலாமா.
பதில் : -எங்களைப் பொறுத்தவரையில் வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்து ஓட்டுவாங்க வேண்டிய எண்ணம் எங்களுக்கு கிடையாது. பணத்தை வைத்து அவர்கள் தற்கால வெற்றியைப் பெற்றுள்ளார்கள். என்றைக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இயக்கம் கழகம். எங்களுக்கு பணநாயத்தின் மீது நம்பிக்கை கிடையாது. கேள்வி
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.








