கோவில்பட்டியில் பரிதாபம்: தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவர் ரெயிலில் அடிபட்டு பலி
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் பாலகணேஷ் (வயது 18). இவரது தந்தை ஆனந்தராஜ்,. கழுகுமலை தெற்கு ரதவீதியை சேர்ந்தவர்.
மாணவர் பாலகணேஷ் தினமும் தனது ஊரிலிருந்து பேருந்தில் புறப்பட்டு கோவில்பட்டி இனாம் மணியாச்சி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து கல்லூரிக்கு செல்வார். கிருஷ்ணாநகர் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
அதே போல் இன்று காலை மாணவர் பாலகணேஷ் கல்லூரிக்கு செல்லும்போது கிருஷ்ணா நகர் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடந்தார். அப்போது அந்த வழியாக நாகர்கோவில்- கோவை ரெயில் வேகமாக வந்ததை கவனிக்கவில்லை.
கண் இமைக்கும் நேரத்தில் மாணவர் பாலகணேஷ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த மாணவரின் பெற்றோர் கதறி அழுதனர். தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் .சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸ்காரர்கள் ஜேசுதாஸ் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.







