• June 7, 2025

போலீஸ் பணிக்கு ஒரே நேரத்தில் தேர்வான 3 சகோதரிகள்

 போலீஸ் பணிக்கு ஒரே நேரத்தில் தேர்வான 3 சகோதரிகள்

தமிழகத்தில் 9,791 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 7 மாதம் அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான பிரீத்தி (வயது 28), வைஷ்ணவி (25), நிரஞ்சனி (22) ஆகிய 3 பேரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
இவர்களில் பிரீத்திக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் சகோதரிகள் 3 பேரும் 2-ம் நிலை காவலர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். பிரீத்தி தேர்வு எழுதிய முதல் தடவையே வெற்றி பெற்றுள்ளார். வைஷ்ணவி 4 முறையும், நிரஞ்சனி 3 தடவையும் போராடி தேர்வாகியுள்ளனர்.
மகள்களின் வெற்றி குறித்து அவர்களின் தந்தை வெங்கடேசன் கூறியதாவது:-

வெங்கடேசன்


‘எனது மனைவி ஷகிலா இறந்த நிலையில் மகள்கள் பிரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி, மகன் கார்த்திகேயன் ஆகியோரை நன்றாக படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று பாடுபட்டேன். நான், பிளஸ் 2 முடித்த பிறகு போலீஸ் தேர்வுக்கு சென்றேன். ஆனால் என்னால் தகுதி பெற முடியவில்லை. இதனால் இருக்கின்ற 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிள்ளைகளை படிக்க வைத்தேன்.
எனது 3 மகள்களும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். மகன் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். மூத்த மகள் பிரீத்திக்கு ராஜீவ்காந்தி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். மற்றவர்கள் திருமணமாகாத நிலையில் போலீஸ் பணிக்கு சகோதரிகள் 3 பேரும் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தனர். ”எனக்கு கிடைக்காத காவலர் வேலை எனது மகள்களுக்கு கிடைத்ததில் பெருமையாக இருக்கிறது.
மகள்கள் 3 பேரும் அரசுப் பள்ளியில்தான் படித்தார்கள். மூத்த மகளும், 3-வது மகளும் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்தனர். 2-வது மகள் அரக்கோணம் அரசு கல்லூரியில் படித்தார். 3 மகள்களும் வீட்டில் இருந்தே காவலர் தேர்வுக்கு படித்தார்கள். எனது விவசாய நிலத்திலே 3 பேரும் ஓட்டப்பயிற்சி எடுத்தார்கள். அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது” எனது மகள்கள் 3 பேரும் ஒரே நேரத்தில் காவலர் பணிக்கு தேர்வானதற்கு மருமகன் ராஜீவ்காந்தி தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *