தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? கனிமொழி எம்.பி. பதில்
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் அமைச்சர் பி.கீதாஜீவன், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழு தலைவர் கனிமொழி எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு மழையின் போதும் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்து பொது மக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மழைநீர் தேங்குவதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி மூலமாக பல்வேறு பகுதிகளில் இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை விரைவுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மழை பெய்தால் இந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மின் மோட்டார்கள் மூலம் மழை நீர் அகற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “பல தரப்பிலிருந்து வரக்கூடிய இந்த கேள்வி நியாயமான கேள்வி. முதல்வர் விசாரித்து தான் எந்த முடிவையும் எடுக்க முடியும்” என்று பதில் அளித்தார்.







