தி.மு.க.வில் இருந்து வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கம்
தி.மு.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் கே.எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் தனது பதிவில் “மன்மோகன் சிங் 2.0 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகள்” என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மன்மோகன் சிங் புகைப்படத்தில் மல்லிக்கார்ஜுன கார்கே தலையை மார்ப் செய்தது போல் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்
இது காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமின்றி தி.மு.க.வினர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி அருகே இளையரசனேந்த்ல் அடுத்த குறிஞ்சான் குளம் கிராமத்தை சேர்ந்த வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தி.மு.க.வில் இருந்தார். காமராஜர்,கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்பு கொண்டிருந்தவர். அரசியலில் மட்டுமல்லாது சிறந்த எழுத்தாளராகவும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
தி.மு.க.வில் இருந்து விலகி வைகோ ம.தி.மு.க.வை தொடங்கிய போது அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தாய்க்கழகமான தி.மு.க.வில் சேர்ந்தார். அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக நியமிகப்பட்டு கட்சி பணியாற்றி வந்தார். பல்வேறு போராட்டங்களில் இவர் கலந்துகொண்டு சிறைக்கு சென்றிருக்கிறார். 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி கிட்டவில்லை.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், தாகூரின் கீதாஞ்சலியில் உள்ள வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்…
“நண்பர்களே நான் பிரியப் போகும் இந்த நேரத்தில் என்னை வாழ்த்தி அனுப்புங்கள்!
வானத்தில் வைகறையின் ஒளி செறிந்து விளங்குகிறது எனது பாதையும் அழகைப் பொழிகிறது நான் என்னுடன் என்ன கொண்டுபோகிறேன் என்று கேட்காதீர்கள்
வெறுங்கையுடன் ஆர்வ இதயத்தோடு என் யாத்திரை ஆரம்பமாகின்றது.
நான் எனது திருமண மாலையை அணிந்து கொள்கிறேன். எனது ஆடை பிராணியின் காஷாய உடையன்று பாதையில் எவ்வித அபாயங்கள் இருந்தபோதிலும் என் மனதில் எவ்வித பயமும் இல்லை.
எனது யாத்திரை முடியும்போது அந்தி நட்சத்திரம் எட்டிப் பார்க்கும் அரசனின் அரண்மனையிலிருந்து அந்தி மாலையின் சோக கீதங்களின் இனிய கோஷம் பொழிந்து கொண்டிருக்கும்.… நான் இந்த வாழ்க்கையை விரும்பும் காரணத்தாலேயே மரணத்தை நேசிக்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.







