தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து மணிமண்டபத்திற்கு இடம் தேர்வு : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடியில் ரோச் பூங்காவில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் நகரின் மையப்பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பரதர் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு சமூக அமைப்பினருடனான கலந்தாலோசனை கூட்டம் ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-
தூத்துக்குடி ரோச் பூங்காவில் குரூஸ் பர்னாந்து மணிமண்டம் அமைக்க பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தூத்துக்குடி பாளை.யங்கோட்டை ரோட்டில் எம்.ஜி.ஆர்., பூங்கா அருகே 20 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய இடத்தினை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தூத்துக்குடியில் ஏற்கனவே குரூஸ் பர்னாந்து சிலை அதே இடத்தில் இருக்கும். அதனை அகற்றும் திட்டம் எதுவுமில்லை. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் அவரது சிலையுடன் மணிமண்டம் அமைக்கப்படும்.
மேலும் இதுகுறித்து தமிழக அரசிற்கு பரிந்துரை செய்து அனுமதி கோரப்படும். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாக அனுமதியும் பெறப்படும். இந்த பணிகள் முடிந்த பின்னர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் .
இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.







