பூ வியாபாரி வெட்டிக்கொலை; தந்தை-மகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
கோவில்பட்டி அருகே கயத்தாறு அடுத்த செட்டிக்குறிச்சியை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 35). பூ வியாபாரி. இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
அழகுதுரை நேற்று தனது உறவினருடன் கயத்தாறு மஞ்சநம்பி கிணற்று பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு மதுகுடிக்க சென்றார். அப்போது அழகுதுரைக்கும் அவரது உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை பார் உரிமையாளரான கரிசல்குளத்தை சேர்ந்த மாடசாமி என்பவர் தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் இரவு நேரத்தில் மாடசாமி, அவரது மகன் பட்டுராஜா மற்றும் உறவினர்கள் 5பேர் சேர்ந்து அழகுதுரை வீட்டிற்கு சென்று எப்படி எங்கள் பாரில் வந்து தகராறு செய்யலாம் என கேட்டனர்.
இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த 7 பேரும் சேர்ந்து அழகுதுரையை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அழகுதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
கொலை குறித்து தகவலறிந்ததும் கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட அழகுதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக தந்தை-மகன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இவர்களில் கனகராஜ், பட்டுராஜ், பால்பாண்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் மற்ற 4 பேரை தேடி வருகிறார்கள்.







