ஓ.பன்னீர்செல்வம்-பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பினால் எதுவும் நடக்காது- டி.ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேரறிஞர் அண்ணா அரசியலில் நாகரிகத்தை கடைப்பிடித்தவர். அண்ணா வழியிலே நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்று சொல்லி இன்றைய விடியா தி.மு.க. அரசில் ஒரு பண்பாடு கிடையாது. அரசியல் நாகரீகம் கிடையாது. அதற்கு மாறாக எதிர்க்கட்சிகளை ஒடுக்கவேண்டும். எதிர்க்கட்சிகளைப் புழுதிவாரி தூற்றவேண்டும்,என்ற அந்த நாகரீகமற்ற அரசியலை இன்றைக்கு தி.மு.க. எடுத்துச் செல்கிறது என்று சொன்னால், அண்ணாவிற்குச் சகிப்புத் தன்மை இருந்தது. ஜனநாயக ரீதியில் வார்த்தைகளுக்கு வார்த்தைகளால் பதில் அளிப்பார். ஆனால் இங்கே அதை எல்லாம் அடக்குமுறைகள் மூலமே இந்த அரசு செய்துவருகிறது. அண்ணாவின் வழியில் நாங்கள் வந்தவர்கள் என்று சொல்வதற்கு தி.மு.வை சேர்ந்தவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு டி.ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி :- நரிக்குறவர்களைப் பட்டியலினத்தில் சேர்க்கப்பட்டதற்கு தி.மு.க.தான் காரணம் என்று சொல்லிவருகிறார்களே
பதில் :- கோயல்பல்ஸ் பிரச்சாரம்போல ஏதோ இவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி பட்டியலினத்தில் சேர்த்தது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இது தவறு. முதல் முதலாக சட்டமன்றத்தில் தீர்மானத்தை இயற்றி மத்திய அரசுக்குக் குரல் கொடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று மத்திய அரசு நரிக்குறவ இன மக்களை பட்டியலினத்தில் சேர்த்துள்ளது.
இதேபோல மீனவர்களுக்குக் கடலில் வேட்டையாடுகின்ற செயலைதான் செய்துவருகிறார்கள். மீன் ஒரு இடத்தில் நிலையாக இருப்பது கிடையாது. அதன் வேகத்தில் காட்டில் எப்படி வேட்டையாடுகிறார்களே அதுபோல கடலில் வேட்டையாடும் இனம்தான் மீனவ இனம். இந்த மீனவ இனத்தையும் பட்டியலினத்தில் சேர்க்கவேண்டும் என்று எங்கள் ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து அழுத்தங்களும் அளிக்கப்பட்டுவிட்டது. இந்த விடியா அரசு இதைப்பற்றி எதுவும் பேசவில்லை. நாளைக்கு மீனவர்களையும் பட்டியலினத்தில் சேர்க்கும்போது அதற்கு நாங்கள்தான் காரணம் என்று அதனையும் சொல்வார்கள்.
கேள்வி :- அண்ணா பிறந்தநாளான இன்று காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் துவக்கிவைத்துள்ளார். காமராஜர்,எம்.ஜி.ஆருக்கு பிறகு நாங்கள்தான் இந்த திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம் என்று சொல்கிறார்களே
பதில் :- கம்பி கட்டும் வேலையை நன்றாக செய்கிறார்கள். இந்த ஆட்சியை பொறுத்தவரையில் உருப்படியான திட்டத்தை செயல்படுத்துவது கிடையாது. ஒரு திட்டத்தை கொண்டுவந்து பெயர் சூட்டுவிழா மட்டும் பிரமாதமாக இருக்கும். பள்ளிகளில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்த முதல்வருக்கு புதிய எவர்சில்வர் பிளேட். புதிய ஸ்பூன் அனைத்தும் அளித்தார்கள். சாப்பாடு போட்டவுடன் அதனை முழுமையாக சாப்பிடவேண்டும் அல்லவா. இரண்டுவாய்தான் எடுத்துவைத்திருப்பார்.அதற்குள் அந்த தட்டிலேயே கையை கழுவிவிட்டார். முதல் அமைச்சர் ஆரம்பித்த திட்டத்தையே முதலமைச்சரே அவமானப்படுத்துகின்ற நிலை உள்ளது.
கேள்வி :- நேற்று ஓ.பன்னீர்செல்வம்,பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து வந்துள்ளார்.இனிமேல்தான் எங்களின் செயலை பார்ப்பீர்கள் என்று தெரிவித்துள்ளாரே?
பதில் :- யார் வேண்டுமானாலும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்திக்கலாம். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. பண்ருட்டியார் நான் யாரையும் பார்க்க மாட்டேன் என்று சொல்வாரா. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்.அதனைத்தான் பார்க்கவேண்டும்.இன்றைக்கு ஒட்டுமொத்த அ.தி.மு.கவினரும் ஒற்றை தலைமை என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகப் பொதுக்குழுவில் தேர்வு செய்து,அங்கீகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் கழகம் வலிமை மிக்க இயக்கமாக இருக்கின்றது.இப்படி இருக்கும்போது யார்,யாரை வேண்டுமானால் சந்திக்கட்டும்.இதனால் எந்த விளைவுகளும் ஏற்படப் போவதில்லை.
கேள்வி:-அம்மாவைப் பார்ப்பதுபோல மக்கள் என்னைப் பார்க்கிறார்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளாரே
பதில் :- சென்ஸ் ஆப் ஹியூமர் அதிகம். அது மட்டுமில்லாமல் ஒரு ஜோக்கை சிரிக்காமல் சொல்வார். இதனை ஜோக்காகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் .மடு எங்கே மலை எங்கே. மடுவிற்கும் மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. மலை என்பது அம்மா.மடு என்பது யார் என்று தெரியும்.
கேள்வி :-அதிமுக அலுவலக சாவி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து வருகிறாரே…
பதில் : அ.தி.மு.க.விற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.







