`மாமன்னன்’ படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் என்னும் நிறுவனம் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் நடைபெற்று வரும் நிலையில், நகைச்சுவை நடிகரான நடிகர் வடிவேலு தனது பிறந்தநாள் விழாவை, படக்குழுவினருடன் உற்சாகமாக கொண்டாடினார்.
இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி தமிழ் குமரன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
பிறந்தநாள் வாழ்த்துகள் முழங்க, கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நடிகர் வடிவேலு. அவருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த உதயநிதி ஸ்டாலின், ஆளுயர ரோஜா மாலையை அணிவித்து வாழ்த்தினார்.
நடிகர் வடிவேலுவுக்கு கதாநாயகி கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
