கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; சி.ஐ.டி.யு. மாநாட்டில் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. 11-வது மாவட்ட மாநாடு கோவில்பட்டியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் குமாரவேல் கொடி யேற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
மாநில செயலாளர் தங்க மோகனன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் ரசல் வேலை, அறிக்கையையும், பொருளாளர் அப்பாதுரை வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.
மாநாட்டில், தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும். தீப்பெட்டி ஆலை பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் இருந்து ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தீப்பெட்டி மூலப்பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
மாநாட்டில் புதிய மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில மாநாடு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
பின்னர் கிருஷ்ணன் கோவில் திடலில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.







