கழுகுமலையில் தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து
கோவில்பட்டி அருகே கழுகுமலையில் காளவாசல் பஸ்நிறுத்தம் அருகே இக்னேஷியஸ் என்பவர் மனைவி செல்வம் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இன்று காலை 9 மணிக்கு தீக்குச்சிகள் உள்ள குடோனில் தீக்குச்சிகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றிகொண்டது. உடனடியாக அந்த அறை முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இது பற்றி அறிந்ததும் கழுகுமலை மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் முத்து பாண்டியன், கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் மலையாண்டி, கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்லவேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தீக்குச்சிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







