ஓ.பன்னீர்செல்வம்,தவறுக்கு மேல் தவறு செய்கிறார் -டி.ஜெயக்குமார் கண்டனம்
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து, மாநிலத்திலிருந்து ஒற்றை தலைமைதான் கழகத்திற்குத் தேவை என்று தீர்மானித்து அந்த ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என்ற அந்த கருத்தை , கடந்த 8 நாட்களாக அவரை சந்தித்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.
இன்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் 75 மாவட்டச் செயலாளர்கள், 25 மண்டல செயலாளர்கள் அனைவரும் எடப்பாடியாரை சந்தித்து ஒற்றை தலைமைதான் வேண்டும் அந்த ஒற்றை தலைமைக்கு நீங்கதான் தலைமை தாங்கவேண்டும் என்ற அந்த தீர்மானத்தை ,இயற்றி அளித்துள்ளார்கள்.
கேள்வி:- அ.தி.மு.க.வில் அராஜக போக்கு நிலவி வருவதாக ஓ.பி.எஸ். டுவிட்டர் பதிவு செய்துள்ளாரே…
பதில்:- அ.தி.மு.க. என்பது ஒரு ஜனநாயகம் மலர்ந்த ஒரு மாபெரும் இயக்கம். இங்கு எந்த அராஜக போக்கும் கிடையாது. இவ்வளவு நாட்களாகப் பார்த்துவருகிறீர்கள். எவ்வளவு ஆர்வத்தோடு, எழுச்சியோடு தங்களுடைய ஆதரவை தெரிவிக்கவேண்டும் என்ற வகையிலே, எடப்பாடியாரை சந்திக்கிறார்கள் என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கிறீர்கள்.
ஓ.பி.எஸ். தவறுக்கு மேல் தவறு செய்துவருகிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில் ஒரு பாடலை பாடுவார். பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை என்று பாடியிருப்பார். அந்த வகையில் ஒரு தவறான பாதையை நோக்கி அவர் சென்று கொண்டிருக்கிறார் என்று மனவருத்தத்தோடு தெரிவிக்கிறேன். பொதுக்குழுவில் அவரும் கலந்துகொள்ளவேண்டும். உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு எடுக்கும் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட்டாக வேண்டும். அவர் உட்பட எல்லோரும் கட்டுபட்டாக வேண்டும். இதுதான் தொண்டர்களின் எண்ணமும் கூட.
கேள்வி:- நாளைக்கு பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் கலந்துகொள்வாரா?
பதில்:-.எனக்கு ஜோதிடம் பார்த்து பழக்கம் இல்லை. இந்த கேள்வியை நீங்கள் அவரிடத்தில்தான் கேட்கவேண்டும். எங்களை பொறுத்தவரையில் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பமும். இந்த பொதுக்குழுவிற்கு இருவரும் சேர்ந்துதானே கடிதம் அனுப்பியுள்ளார்கள். அவர் (ஒபிஎஸ் ) கலந்துகொள்ளக் கூடாது என்று சொல்லவில்லை. அவர் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த விருப்பம். கலந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கேள்வி.:- சமரச பேச்சு தோல்வி அடைந்துவிட்டதா.
பதில்:- ஒரு கருத்து தலைமைகழகத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் மட்டத்தில் பேசப்பட்டு, அந்த கருத்தின் அடிப்படையில் ஒற்றை தலைமையை நோக்கி இன்றைக்குக் கட்சி வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரவேண்டும். தொண்டர்கள் விரும்புவது அதுதான். பொதுமக்கள் விரும்புவதும் அதுதான். தலைமைகழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் விருப்பம் அதுதான். ஊரோடு ஒத்து வாழவேண்டும் என்பதை போல ஒத்து வாழவேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்







