தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு ; அக்டோபர் 5ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 25-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.
அதனைத் தொடர்ந்து, அனைத்து வகையான அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குப் பிறகு அக்டோபர் 5 (திங்கட்கிழமை) அன்று அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் இயங்கும் எனப் பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்:
விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே (அக். 5) முதல் பாடவேளையில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் வழங்கிட வேண்டும்.
திறக்கும் நாளன்றே மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களிடம் வழங்கி, மதிப்பெண்களை உரிய பதிவேடுகள் மற்றும் EMIS இணையதளத்தில் உடனடியாக பதிவேற்ற தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுமுறை நாட்களில் மாணவர்கள் வினாத்தாள்களுக்கான விடைகளை (Assignment) எழுதி வரவும், தினமும் ஒரு பாடம் படிக்கும் வகையிலும் ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மாணவர்கள் விடுமுறையில் தொடர் பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜயதசமி நாளன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி, அச் சேர்க்கை விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்ய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.







