கோவில்பட்டியில் 3 வயது சிறுமி மரணத்தில் சந்தேகம்; போலீஸ் விசாரணை
கோவில்பட்டி பாரதி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சிவசக்தி. இத்தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ருத்ரா வைஷ்ணவி.
கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வரும் மாரியப்பன், கடந்த செப்டம்பர் 14-ம் தேதி சொந்த ஊரான கோவில்பட்டிக்கு வந்தார்.
அன்று மதியம் மாரியப்பன் தனது மகள் ருத்ரா வைஷ்ணவியை கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிய சிறுமி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள்.

இதுபற்றி , தாய் சிவசக்தி விசாரித்ததற்கு, தந்தை அடித்ததாக சிறுமி கூறியதாக தெரிகிறது.
இதற்kடையே மறுநாள் 15-ஆம் தேதி சிறுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட சிறுமி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் சிவசக்தி அளித்த புகாரை தொடர்ந்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலேயே, சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.







