நடுவானில் 300 அடி கீழே சரிந்த ஏர் இந்தியா விமானம்; பயணிகள் அலறல்
தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை புறப்பட்டடு வந்துகொண்டிருந்த, ஏர்பஸ் A320 என்ற குறுகிய வடிவ விமானம் கடுமையான வான்வழிச் சுழற்சியில் சிக்கியது.
அப்போது விமானம் தனது கட்டுப்பாட்டைச் சற்றே இழந்து, 300 அடி கீழே சரிந்தது.

சில பயணிகளும், ஊழியர்களும் விமானத்தின் மேல் கூரையில் பலமாக மோதி தூக்கி வீசப்பட்டனர். இதனால் விமானத்தினுள் பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது.
விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, காலை 11:30 மணியளவில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பத்திரமாகத் தரை இறங்கியது.
விமானம் தரையிறங்குவதற்கு முன்பே அவசர மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். காயமடைந்த 15 பேருக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளும் அவசர சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
இதில் ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து இந்தியாவின் தலைமை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான DGCA விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.







