தமிழகத்தில் அதிரடி வேட்டை: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் 24 பேர் கைது- ரூ.1.3 கோடி பறிமுதல்
தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையால் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் 24 பொறிவைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அலுவல் ரீதியான பணிகளைச் செய்வதற்காக ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் கேட்டு பெற்ற அரசு ஊழியர்கள் (இணை ஆணையாளர் அறநிலையத்துறை, வட்டாட்சியர், இளநிலை உதவியாளர், உதவி மின் பொறியாளர், மின்வாரிய வணிக ஆய்வாளர், சமூகநல விரிவாக்க அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், இரண்டாம் நிலை காவலர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட் டோர்) 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சை, ராணிப்பேட்டை, சென்னை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 13 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஊழல் தடுப்பு சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.13 லட்சத்து 39 ஆயிரத்து 80 கைப்பற்றபட்டது.
இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த மாதம் 17-ந்தேதி தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.13 லட்சத்து 88 ஆயிரத்து 750 கைப்பற்றப்பட்டது.

சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ‘ஜி-பே’ பரிவர்த்தனைகள் ரூ.94 லட்சத்து 69 ஆயிரத்து 887 என மொத்தம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 607 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







