போலி அடையாள அட்டைகளுடன் அதிகாரி போல் வலம் வந்தவர் கைது
.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் போலி அடையாள அட்டைகளுடன் அதிகாரி போல் வலம் வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இது பற்றிய விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம், கூந்தங்குளம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(38). இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய சுகாதார நல்வாழ்வு குழுமத்தின் தற்காலிக சுகாதார பணியிடத்திற்கான நேர்காணலில் பங்கேற்பதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார்.

அவரது இரு சக்கர வாகனத்தில் போலீஸ் என எழுதப்பட்டிருந்தது. மேலும் அவர் காக்கி பேண்ட், போலீஸ் பெல்ட் அணிந்திருந்தார். கையில் இருந்த பைலை வைத்துக் கொண்டு நேர்காணலில் பங்கேற்க வந்ததாக தெரிவித்தார்.
அவரது நடவடிக்கைகள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் தவெக உறுப்பினர் அட்டை இருந்தது. மேலும் சிபிஐ ஸ்பெஷல் ஆபீஷர், விஜிலன்ஸ், மத்திய போலீஸ், உளவுப்பிரிவு, தேசிய மனித உரிமை ஆணையம், எல்ஐசி, உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசுத் துறைகளின் போலி அடையாள அட்டைகள், பிரஸ் அடையாள அட்டைகள் என 20க்கும் மேற்பட்ட போலி அடையாள அட்டைகள் பல்வேறு வண்ணங்களில் இருந்தன.
ஆங்கிலம், இந்தி என பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டிருந்த விதவிதமாக அடையாள அட்டைகளை பார்த்த போலீசார் திகைத்தனர். இந்த அடையாள அட்டைகள் குறித்து விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தார். இதனையடுத்து அவரை பாளையங்கோட்டை போலீசார் போலீஸ் ஸ்டேஷனிற்கு கொண்டு சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு 20க்கும் மேற்பட்ட மத்திய அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் போலி அடையாள அட்டைகளை தயாரித்து, அவற்றில் போலி முத்திரைகளும் இட்டு உலா வந்தது அம்பலமானது. அவர் மீது அரசு அதிகாரி போல் நடித்து மோசடி செய்ததாக வழக்குபதிந்து போலீசார் கைது செய்தனர்.
இந்த அடையாள அட்டைகளை எதற்காக தயாரித்தார், ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா, பின்னணியில் யாரும் உள்ளனரா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.







