பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார் விஜயதரணி; அதிமுக நிர்வாகிகளும் ஐக்கியம்

அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலர், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்பிக்கள் வனரோஜா, இளவரசன், பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ முருகேசன், முன்னாள் எம்எல்ஏ ரவி, திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்
இதேபோல், பாஜகவைச் சேர்ந்தவரும், விளவங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். விஜயதரணி, திருப்பூர் பாஜக மகளிர் அணி நிர்வாகி கே. ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
தவெகவில் இணைய வருகை தந்தவர்களுக்கு, அமைச்சர் ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கட்சித் துண்டு அணிவித்து கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயதரணி,கூறியதாவது:- மக்களிடம் மாற்றத்தைக் கொண்டு வந்த கட்சி தவெக. இன்று நாடே திரும்பிப் பார்க்கக்கூடிய வகையில் சிறந்த ஆட்சியை தவெக வழங்கி வருகிறது. இன்னும் 10-15 ஆண்டுகளில் இந்தியாவையே வழிநடத்தக்கூடிய இடத்தில் விஜய் இருப்பார்.
பாஜகவில் இரண்டரை ஆண்டு காலம் எந்தப் பணியும் இல்லாமல் பயணித்தேன். அரசியலில் பணி என்பது முக்கியம். மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கருதும் என்னைப் போன்றவர்களுக்கு தவெக சிறந்த இடம் என்று கருதுகிறேன். எங்கள் உழைப்பு மக்களுக்குத் தேவை என்பதை அறிந்து அவர்கள் எங்களை அழைத்து, இணைத்திருக்கிறார்கள்

.
தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்த கட்சி, ஊழலற்ற ஆட்சியை அளிக்கும் கட்சி, போதை கலாச்சாரத்தை ஒழிப்பேன் என்ற சபதம் செய்துள்ளவரை தலைவராகக் கொண்ட கட்சி, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்சி என்ற அடிப்படையில் நான் உட்பட பலரும் தவெகவில் இணைந்துள்ளோம்.
இவ்வாறு விஜயதாரணி தெரிவித்தார்.
‘







