கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதலமைச்சர் விஜய் வழிபாடு; வெள்ளி வாள் காணிக்கை
3 நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்றார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மங்களூரு சென்றடைந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாகக் காரில் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்றார்.

கோவில் வளாகத்தில் அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ந்து, மூலவர் மூகாம்பிகை அம்மனை நேரில் தரிசித்து வழிபாடு செய்த முதலமைச்சர் விஜய், பின்னர் கோவில் பிரகாரத்தை முறைப்படி சுற்றி வலம் வந்தார்.
இந்த வழிபாட்டின் போது, கோவிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள, 2.5 அடி நீளமுடைய பிரம்மாண்ட வெள்ளி வாள் ஒன்றைக் காணிக்கையாக அவர் வழங்கினார்.
பின்னர் வழிபாட்டைமுடித்துக் கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

முதலமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி கொல்லூர் மூகாம்பிகை கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையொட்டி, அங்குத் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.







