கோவில்பட்டி அருகே இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்: கொலை வழக்கு பதிவு செய்து தாய் -அண்ணன் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு காவல் எல்லைக்குட்பட்ட தெற்கு மயிலோடைப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை (9.6.2026) அன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண் உடலைக் கைப்பற்றி, சந்தேக மரணம் என்ற அடிப்படையில் முதற்கட்ட வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான கள விசாரணை, மருத்துவ உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட பல்வேறு அறிவியல் பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில், அந்த இளம் பெண்ணின் மரணத்தில்
சந்தேகங்கள் எழத் தொடங்கின.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் தாயாரான எஸ்தர் பாலின் மற்றும் அவரது அண்ணன் சிவஞானம் ஆகிய இருவரிடமும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனியாகத் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், உயிரிழந்த இளம் பெண் சமூக வலைதளம் மூலமாக ஒருவருடன் பழகியது தெரிய வந்தது.
இது தொடர்பாக அவரது குடும்பத்தில் கடுமையான வாக்குவாதங்களும் தகராறுகளும் தொடர்ந்து ஏற்பட்டு வந்தன. இந்தத் தகராறின் உச்சக்கட்டமாகவே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

சேகரிக்கப்பட்ட சான்றுகள் மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் மூலம், இளம் பெண்ணின் மரணத்தில் அவரது தாய் எஸ்தர் பாலின் மற்றும் அண்ணன் சிவஞானம் ஆகிய இருவருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், தற்கொலை வழக்கு உடனடியாகக் ‘கொலை வழக்காக’ மாற்றப்பட்டு, குற்றவாளிகளான தாய் மற்றும் அண்ணன் ஆகிய இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இச்சம்பவம் “ஆணவக் கொலை” என உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவித ஆதாரமும் கண்டறியப்படவில்லை.
எனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் “ஆணவக் கொலை” குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படாதவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், உறுதி செய்யப்படாத மற்றும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய செயலாகும். எனவே இதுபோன்ற வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







