கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொள்ளிப் பானை உடைத்து நூதன போராட்டம்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாடை கட்டி சங்கு ஊதி, கொள்ளிப் பானை உடைத்து நூதன போராட்டம் நடந்தது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் பல பகுதிகளில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களுக்கு புதியதாக வீட்டுத் தீர்வை வழங்க வேண்டும்.
குடும்ப தலைவர் இறந்தபின் வீட்டுத்தீர்வையை வாரிசுதாரர்கள் பெயரில் தீர்வை மாற்றி வழங்க வேண்டும்.
தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் மந்தித்தோப்பு சாலையை விரிவுப்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமையில், மாவட்ட உதவிச் செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம்,நகரக்குழு உறுப்பினர் முனியசாமி, கோமதி, நகர துணைச் செயலாளர்கள் விஜயலட்சுமி, அலாவுதீன்,நகரப் பெருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஏ.கே.எஸ்.திரையரங்கு சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து பாடையை தூக்கி, சங்கு ஊதியபடி ஊர்வலமாக பயணியர் விடுதி முன்பு வந்தனர். அங்கு இறந்தவருக்கு செய்யும் சடங்குகளை செய்து, கொள்ளிப்பானை உடைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.







