என் மீதான பாலியல் புகார் குற்றச்சாட்டுபொய்யானது; போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீபன் உருக்கமான வீடியோ
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் திலீபன். இவர் அங்கு பணியாற்றிய, தற்போது சிங்கப்பெண் அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ள பெண் காவலர் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு மற்றும் மன உளைச்சல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், இது குறித்து தட்டிக்கேட்ட அந்தப் பெண் காவலரின் கணவரை, அனைவர் முன்னிலையிலும் தனது துப்பாக்கியை மார்பில் வைத்துச் சுட்டுவிடுவதாகக் கூறி இன்ஸ்பெக்டர் திலீபன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தனியார் டி . வி.செய்திச் சேனல், மற்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் தன் மீது பரப்பப்படும் இத்தகைய குற்றச்சாட்டு பொய்யானது என்று இன்ஸ்பெக்டர் திலீபன், உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது
“ஊடகங்களில் என் மீது பரப்பப்பட்டு வரும் செய்திகள் யாவும் முற்றிலும் உண்மைக்கு மாறானவை. இச்செய்தியின் உண்மைத் தன்மையை முழுமையாகத் தெரிந்துகொள்ள என்னிடமோ, என்னுடன் பணியாற்றும் சக ஆண் மற்றும் பெண் காவலர்களிடமோ அல்லது எனது ஊர் மக்களிடமோ உரிய விசாரணை நடத்திவிட்டுச் செய்திகளை வெளியிடுங்கள்.
காவல் பணியை மிகவும் பொறுப்புணர்வோடும் சவாலோடும் விரும்பிச் செய்து வருகிறேன். என்னுடன் பணியாற்றும் சக பெண் காவலர்கள் தங்களது பணி விவகாரங்களிலோ அல்லது வேலைகளில் தொய்வு ஏற்படும் போதோ காவல் துறை ஒழுங்கு நடவடிக்கைக்காகக் கொஞ்சம் கண்டித்துத் திட்டியுள்ளேனே தவிர, எவ்விதமான பாலியல் அச்சுறுத்தலோ அல்லது மன உளைச்சலோ நான் யாருக்கும் கொடுத்ததில்லை.
அங்கு பணிபுரியும் பெண் போலீசாரை என் சொந்தப் பிள்ளைகளாகவே நான் நினைத்து வருகிறேன். என் மீது அத்தகையதொரு புகாரைப் பெண் காவலர் கொடுக்க வாய்ப்பே இல்லை என நான் 100 சதவீதம் நம்புகிறேன்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மேற்கொள்ளும் எந்தவொரு விரிவான விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக உள்ளேன்.

சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறேன். என் மீதான இந்த அவதூறான பாலியல் புகாரிலிருந்து நான் முழுமையாக விடுபடாமல், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியில் சேர மாட்டேன்.
இவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீபன் தெரிவித்துள்ளார்.







