தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி உயிரிழப்பு
கோவில்பட்டி பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 70).தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரிவர காது கேட்காது என்று கூறப்படுகிறது.

சென்னையில் சிகிச்சை பெற்று வரும் தனது பேரனை பார்ப்பதற்காக அருளானந்தம், அவரது மனைவி அமராவதி மற்றும் பேரன் அர்ஜுனன் (9) ஆகியோர் ரெயில் மூலம் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.. 2வது நடைமேடைக்கு செல்வதற்காக ரெயில்வே தண்டவாளத்தை கடந்த போது செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் அதிவேக ரெயில் அருளானந்தம் மீது மோதியது.
இதில் அவர் சுமார் 400 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்தும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியோர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








